அவதூறுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது: நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம்
|தன்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களுக்காக நடிகை நிவேதா பெத்துராஜ் உருக்கமான விளக்கத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் அதிரடியாக பதிவு செய்திருக்கிறார்
சென்னை,
ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் உட்பட இதுவரை சுமார் 20 படங்களில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நிவேதா, பள்ளி படிப்பை அங்கு முடித்துவிட்டு தந்தையின் வியாபாரம் நிமித்தமாக துபாயில் வசித்து வருகிறார்.
இந்த சூழலில், தன்னை பற்றி அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி பருவதாக வேதனை தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக பரவும் பொய் செய்தியால், நானும் என் குடும்பமும் மிகப்பெரிய மன உளைச்சலில் இருக்கிறோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசித்துப் பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். என்னுடைய 16 வயதிலிருந்து நான் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் வாழ்ந்து வருகிறேன். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வருகிறோம். நான் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளேன். அவையெல்லாம் என்னை தேடி வந்த வாய்ப்புகள்தான்.
நான் ஒருபோதும் பணத்துக்காகவோ, வேலைக்காகவோ பேராசையுடன் இருந்தது கிடையாது. 2002 முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். என்னைப் பற்றி இதுவரையில் பேசப்படும் அவதூறுகளில் எதுவுமே உண்மையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக தானும், தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். இதை நான் சட்டரீதியாக எடுத்து செல்லவில்லை. இன்னும் பத்திரிகைத் துறையில் மனிதம் மீதமிருக்கிறது என்பதை நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.