அக்சய் குமாரின் 'கேல் கேல் மெய்ன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|நடிகர் அக்சய் குமார் 'கேல் கேல் மெய்ன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பை,
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். 56 வயதாகும் இவர், தமிழில் ரஜினியுடனான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஓஎம்ஜி -2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தினை இந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியானது.
தற்போது, நடிகர் அக்சய் குமார் 'கேல் கேல் மெய்ன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் டாப்ஸி , பர்தீன் கான், வாணி கபூர், அம்மி விர்க், ஆதித்யா சீல் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். வக்காவ் பிலிம்ஸ் மற்றும் கேகேஎம் பிலிம் புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டை அக்சய் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இப்படம், அதே தேதியில் வெளியாகும் ஜான் ஆபிரகாமின் 'வேதா', ஷ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார் ராவின் 'ஸ்ட்ரீ 2' ஆகிய படங்களுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.