அக்சய் குமார் நடிக்கும் புதிய படம் - இயக்குனர் யார் தெரியுமா..?
|அக்சய் குமார் நடிக்கும் புதிய படத்தினை சித்தார்த் ஆனந்த் தயாரிக்க உள்ளார்.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்சய் குமார். 56 வயதாகும் இவர், தமிழில் ரஜினியுடனான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்சய் குமார் நடித்திருந்தார். 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அக்சய் குமார் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அக்சய் குமார் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை டோபரா' என்ற படத்தின் இயக்குனர் மிலன் லூத்ரியா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை 'பதான், வார் மற்றும் பைட்டர்' போன்ற படங்களை தயாரித்த சித்தார்த் ஆனந்த் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கான மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இதற்கிடையில் நடிகர் அக்சய் குமார், 'ஹவுஸ்புல் 5', 'ஜாலி எல்எல்பி 3' மற்றும் 'வெல்கம் டு தி ஜங்கிள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது வரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலில், தற்போது இந்த படமும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.