வதந்தியால் வருந்திய அக்ஷய்குமார்
|தனியாக ஜெட் விமானம் வைத்துள்ளார் என்ற வதந்தியால் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வருத்தமடைந்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். வருடத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அக்ஷய்குமார் தனியாக ஜெட் விமானம் வைத்துள்ளார் என்றும், அதன் விலை ரூ.260 கோடி என்றும் இணைய தளத்தில் தகவல் வெளியானது. இதை பலரும் வைரலாக்கினார்கள்.
இதனால் வருத்தமடைந்த அக்ஷய்குமார் தனி விமானம் வாங்கவில்லை என்று மறுத்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னை பற்றி பொய் தகவலை பரப்பி உள்ளனர். அந்த சின்ன புத்தியில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவர எனக்கு விருப்பம் இல்லை. ஆதாரம் இல்லாமல் என்னை பற்றி பொய்யாக வெளியான தகவலை கண்டிக்கிறேன்'' என்று கூறியுள்ளார். அக்ஷய்குமார் பெல்பாட்டம் இந்தி படத்தில் நடித்தபோது ஒரு தனியார் விமானம் முன்னால் நின்று போஸ் கொடுத்து இருந்தார். அதை வைத்து அவர் ஜெட் விமானம் வாங்கிவிட்டதாக தவறான தகவலை பரப்பி உள்ளனர்.