இந்திய பயணத்தை முடித்தார் 'பைக்'கில் அஜித்குமார் உலக சுற்றுப்பயணம்
|அஜித்குமார் உலக பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் அஜித்குமாருக்கு உலகம் முழுவதும் பைக்கில் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது கனவு. இந்தியாவில் இந்த பயணத்தை சில மாதங்களுக்கு முன்பே அவர் தொடங்கிவிட்டார். சமீபத்தில் வட மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்தார். துணிவு படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் பைக்கில் சுற்றினார்.
அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியரும் பைக் பயணத்தில் இணைந்தார். அசாம், அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் பைக்கில் சென்றார். லடாக், மணாலி, கார்கில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பைக் பயணம் செய்தார். ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் அஜித்குமார் உலக பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் சென்ற நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இது ஒரு சாதனை என்றும், இந்தியாவில் எந்த பகுதிகளுக்கெல்லாம் அஜித் சென்றாரோ அங்கெல்லாம் அவருக்கு மக்களிடம் இருந்து பெரிய அன்பு கிடைத்தது என்றும் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்து விட்டு உலக சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறார்.