நடிகர் அஜித் சக பைக் ரைடர்களுக்கு பிரியாணி சமைத்து பரிமாறும் வீடியோ வைரல்!
|நடிகர் அஜித் தன்னுடன் பயணிக்கும் சக பைக் ரைடர்களுக்கு பிரியாணி சமைத்து பரிமாறி அசத்தி இருக்கிறார்.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2-வது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. சமீபத்தில் சென்னைக்கு திரும்பிய அஜித், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடினார்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட அவர், சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்து காது பகுதிக்கு வரும் நரம்பில் வீக்கம் இருந்ததால், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது. பின்னர், அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை என வெளியான தகவல்கள் பொய் என்பது உறுதியானது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்துக்கான 2-வது கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால் அஜித் தனது பைக் ரைடிங்கை தொடங்கியுள்ளார். அதன்படி தற்போது மத்தியபிரதேசத்தில் பைக் ரைடிங் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி நேற்று அவர் பைக் ரைடர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
பைக் ரைடிங் சென்ற இடத்தில் சக பைக் ரைடர்களுக்கு நடிகர் அஜித் டிப்ஸ் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருந்தது. வீடியோவில் நடிகர் அஜித்குமார் பைக் ரைடர் ஒருவருக்கு பாடம் எடுக்கும் காட்சிகளும், டிப்ஸ் கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இரவு நேரத்தில் தன்னுடன் பயணித்த சக பைக் ரைடர்களுக்கு அஜித் ஸ்பெஷல் பிரியாணி செய்து பரிமாறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்புத் தளங்களில் நடிகர் அஜித் சமைத்து தரும் பிரியாணியின் சுவையை சக நடிகர்கள் அவ்வப்போது பேட்டிகளில் சொல்லி வரும் நிலையில், தன்னுடன் பயணிக்கும் சக பைக் ரைடர்களுக்கும் பிரியாணி சமைத்து பரிமாறி அசத்தி இருக்கிறார்.