சண்டைக் காட்சியில் `டூப்'போடாமல் நடித்த அஜித் - டைரக்டர் வினோத் நெகிழ்ச்சி
|அஜித்குமார் நடித்துள்ள `துணிவு' படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை டைரக்டு செய்துள்ள எச்.வினோத் கதை, கதாபாத்திரங்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசியதில் இருந்து…
``துணிவு படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்றும், பஞ்சாப் வங்கிக் கொள்ளை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது என்றும் நிறைய வதந்திகள் சமூக வலைத்தளத்தில் வலம் வருகின்றன. அவை உண்மையில்லை. படத்தில் சமூக பிரச்சினை சம்பந்தமான விஷயங்களும் இடம்பெறவில்லை.. கற்பனைக் கதை. சுவாரஸ்யமான கமர்ஷியல் படம். இந்த படத்தின் கதையானது அயோக்கியர்களின் ஆட்டமாக இருக்கும். முற்றிலும் பொழுதுபோக்கு அம்சத்தில் குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். வழக்கமான அஜித் குமாரை இந்த படத்தில் பார்க்க முடியாது. நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டி நடித்து இருக்கிறார்.
அவர் வயதுக்கேற்ற இயல்பான தோற்றம் எங்களுக்கு பிடித்து இருந்ததால் அதையே படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம். முழு அதிரடி சண்டை படமாக எடுத்துள்ளோம். சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் அஜித்தே நடித்து இருக்கிறார். சில நேரம் முட்டி வீங்கி இருக்கும். அந்த வலிகளையும் அசவுகரியங்களையும் வெளியே காட்டாமல் நடித்தது பெரிய விஷயம். 55 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் 3 பாடல்கள் உள்ளன. ஒன்று கதையோடு வரும். இன்னொரு பாடல் ஓப்பனிங் பாடலாக இருக்கும்.
மஞ்சு வாரியர் காதலியாக வரவில்லை அஜித் குழுவில் இருக்கும் ஒருவராக நடித்துள்ளார். அவருக்கும் சண்டைக் காட்சி உள்ளது. அஜித்குமாருடன் பணியாற்றியது இனிய அனுபவம். இன்று பெரிய வளர்ச்சி நிலையில் இருந்தாலும் சக மனிதர்களை எப்படி மதிப்பது, விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது எப்படி, என்பதை அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அஜித்துடன் பணியாற்றியதை ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரி யாகவும், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் பத்திரிகையாளராகவும் வருகிறார்கள். அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் கொண்டாட்டமாக இருக்கும்'' என்றார்.