சக நடிகரை கேலி செய்த அஜய் தேவ்கன் - தற்கொலைக்கு முயன்ற சக நடிகரின் மனைவி
|தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த திரைப்படம் 'சைத்தான்'.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இவர் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சைத்தான்'. இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு ஒன்றைத் தனது சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன். அதில் அவர் சக நடிகரை கேலி செய்வதாக செய்த செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. அது குறித்து அவர் கூறுகையில்,
"என்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருக்கு அப்போதுதான் புதிதாக திருமணம் நடந்திருந்தது. அப்போது எங்கள் படத்தின் படப்பிடிப்பு வெளியூரில் நடந்து கொண்டிருந்தது. அவர் தனது மனைவியையும் அங்கு அழைத்து வந்திருந்தார். அவரது மனைவிக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. படப்பிடிப்பை பார்ப்பது அவருக்கு அதுதான் முதல் முறை.
அப்போது நாங்கள் அந்த நடிகரது மனைவியிடம் கேலியாக, பெரும்பாலும் எங்களுக்கு நைட் சூட்தான். இரவில் 10.30 மணிக்கெல்லாம் சூட் முடித்து விடுவோம். பின்னர் அவர் இரவில் வேறு பெண்ணை சந்தித்து விட்டு, பகலில் உங்களை சந்திக்கிறார், என்று சொன்னோம். அதை முதலில் அவர் நம்பவில்லை என்றாலும் தொடர்ந்து ஒரு வாரமாக இதையே அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தோம்.
சரியாக எட்டாவது நாள் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. நாங்கள் சொன்ன இந்த பொய்யை ஒருக்கட்டத்தில் அவர் உண்மை என நம்பி, கணவருடன் சண்டை போட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியாகிவிட்டோம். எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, பின்பு அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு நடந்தவற்றை விளக்கினோம்" இவ்வாறு கூறினார்.