சென்னை
ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பில் தீ விபத்து
|பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் கூதாரா, யூ டூ புரூட்டஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, ஸ்டைல், லூசிபர், உயிரே, மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அபியும் அனுவும், தனுசுடன் மாரி 2-ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பாசில் ஜோசப், சுரபி லட்சுமி, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் உள்ளனர். ஜித்தின் லால் டைரக்டு செய்கிறார். மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை காசர்கோடு சீமேனியில் அரங்குகள் அமைத்து நடத்தி வந்தனர். இந்த அரங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு அரங்கு முழுவதும் எரிந்து நாசம் ஆனது. ஆனாலும் படக்குழுவினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.