அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு: நடிகை ரோஜாவுக்கு மீனா, நவ்நீத் கவுர் ஆதரவு..!
|ரோஜா குறித்து ஆந்திர முன்னாள் மந்திரி பண்டாரு சத்யநாராயணா ஆபாசமாக அவதூறு கருத்துகள் வெளியிட்டார்.
நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா குறித்து ஆந்திர முன்னாள் மந்திரி பண்டாரு சத்யநாராயணா ஆபாசமாக அவதூறு கருத்துகள் வெளியிட்டார். இதை கேட்டு ரோஜா மனம் உடைந்து அழுதார். பண்டாரு சத்யநாராயணா பேச்சை நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள நவ்நீத் கவுரும் ரோஜாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நவ்தீத் கவுர் கூறும்போது, "பண்டாரு! உங்களுக்கு வெட்கம் இல்லையா? மந்திரி ரோஜா மீது இவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறீர்களே? உங்கள் வீட்டில் மனைவி, மகள், சகோதரி இப்படி யாரும் இல்லையா? தெலுங்கு மாநிலங்களில் பெண்களை கவுரவிப்பார்கள். ஆனால் இந்த பண்டாரு பெண்களின் கவுரவத்தை குறைத்து கேவலமாக பேசி இருக்கிறார்.
உங்களுக்கு அரசியல் முக்கியமா? பெண்களின் கவுரவம் முக்கியமா? உங்கள் பேச்சுக்கு வெட்கப்படுங்கள். நான் ரோஜாவிற்கு ஆதரவாக இருப்பேன். ரோஜா சினிமா துறைக்கு இணையில்லா சேவை செய்திருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்திருக்கிறார்.
அவரை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேசியது சரியல்ல. நான் கடுமையாக கண்டிக்கிறேன்'' என்று தெரிவித்து உள்ளார்.
நடிகை மீனா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, "நடிகை ரோஜாவை பற்றி பண்டாரு சத்யநாராயணா தெரிவித்த கருத்து என்னை கோபப்படுத்தியது.
வாழ்க்கையில் ஒரு பெண் வளர்ச்சி அடைவதை பார்க்கும்போது முன்னேறும்போது இப்படி பேசுவீர்களா? இதுபோன்று பேசினால் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு அழுவார்கள் என நினைக்கிறீர்களா.
காலம் மாறிவிட்டது. ரோஜாவை பற்றி கேவலமாக பேசிய பண்டாரு சத்ய நாராயணா மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரோஜா உங்களுக்கு பின்னால் நான் இருக்கிறேன். உங்களை பார்த்து பெருமைப்படுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ரோஜாவிற்கு நீதி கிடைக்கும்படி செய்ய வேண்டும்'' என்றார்.