சூர்யா பட நடிகர் பரேஷ் ராவல் மீது வழக்கு
|குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பரேஷ் ராவல் பிரசாரம் செய்தபோது வங்காளிகள் குறித்து சர்ச்சையாக பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது.
தமிழில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடித்தவர் பரேஷ் ராவல். இவர் இந்தியில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பரேஷ் ராவல் பிரசாரம் செய்தபோது வங்காளிகள் குறித்து சர்ச்சையாக பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது.
பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொல்கத்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில் பரேஷ் ராவல் பேச்சு வங்காள சமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து பரேஷ் ராவல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.