< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக களமிறங்கிய நடிகை அபர்ணா பாலமுரளி...!
சினிமா செய்திகள்

நயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக களமிறங்கிய நடிகை அபர்ணா பாலமுரளி...!

தினத்தந்தி
|
14 Dec 2023 5:30 PM IST

நடிகை அபர்ணா பாலமுரளி தனது நண்பர்களுடன் இணைந்து 'கிப்ஸ்வே' எனப்படும் புதிய ஆடை தொழிலை தொடங்கி உள்ளார்.

சென்னை,

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்

அபர்ணா பாலமுரளி நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார் . இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் தற்போது தங்கம் என்கிற மலையாள படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 26-ந் தேதி ரிலீஸாக உள்ளது. சஹீத் அராபத் இயக்கியுள்ள இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகை நயன்தாராவை தொடர்ந்து அபர்ணா பாலமுரளியும் தொழிலதிபராக களமிறங்கி உள்ளார். அவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'கிப்ஸ்வே' எனப்படும் புதிய ஆடை தொழிலை தொடங்கி உள்ளார். இதன்மூலம் பெண்களுக்கான பிரத்தியேகமான எலீட் உடைகளை வடிவமைத்து விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த மாதம் எலிசியம் டிரீம் ஸ்கேப் எனப்படும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். தற்போது இவர் புதிய ஆடை தொழிலையும் தொடங்கி உள்ளார். இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவரின் இந்த புதிய தொடக்கத்திற்கு நடிகை நயன்தாராவும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில, 'வாழ்த்துக்கள் அபர்ணா பாலமுரளி, உங்களை நினைத்து பெருமை அடைகிறேன். உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்