அம்பானி இல்ல திருமணவிழா: தனித்தனியே வந்து ஒன்றாக அமர்ந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன்
|அம்பானி இல்ல திருமண விழாவில் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை,
'உலக அழகி' என்ற பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
சமீபகாலமாக ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால் ஆராத்யா படிக்கும் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றதால் பிரச்சினைகள் தீர்ந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.
மும்பையில் நடந்த அம்பானி இல்ல திருமண விழாவில் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இதனால், இருவரும் பிரிய உள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில், விழாவிற்கு தனித்தனியே வந்திருந்தாலும், இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து இருவரும் பிரிய உள்ளதாக பரவியது வதந்தி என்று தெரிகிறது.