அல்லு அர்ஜூனிடம் இருந்து நானிக்கு கைமாறிய 'ஐகான்'
|அல்லு அர்ஜூனுக்காக காத்துக் கொண்டிருந்த ‘ஐகான்’ படக்குழுவினர், தற்போது அந்தப் படத்தில் நானியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
தெலுங்கு சினிமாவிற்குள், 'ஓ மை பிரண்ட்' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர், வேணு ஸ்ரீராம். 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
2015-ம் ஆண்டு தெலுங்கின் முன்னணி நடிகரான ரவிதேஜாவை வைத்து, 'எவடோ ஒக்கடு' என்ற படத்தை இயக்குவதாக வேணு ஸ்ரீராம் அறிவித்தார். இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிப்பதாகவும் இருந்தது. இதில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் படம், 2016-ம் ஆண்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நானியை வைத்து 'மிடில் கிளாஸ் அப்பாயி' என்ற படத்தை வேணு ஸ்ரீராம் இயக்கினார். 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், வேணு ஸ்ரீராமருக்கு மட்டுமல்லாது, நானிக்கும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
தொடர்ந்து 2021-ம் ஆண்டு 'வக்கீல் சாப்' என்ற படத்தை இயக்கினார். இதில் பவன் கல்யாண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தமிழில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ரீமேக் ஆகும்.
இதற்கிடையில் வேணு ஸ்ரீராம், நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து 'ஐகான்' என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், பூஜா ஹெக்டேவும் முடிவு செய்யப்பட்டிருந்தார்கள். இந்த அறிவிப்புக்குப் பின்னர், தன்னுடைய பெயருக்குப் பின்னால் 'ஐகான் ஸ்டார்' என்ற பட்டத்தைப் போடுவது பற்றிக்கூட அல்லு அர்ஜூன் முடிவு செய்திருந்தார். படப்பிடிப்பு இல்லாத நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, 'ICON' என்று அச்சிடப்பட்ட டி-சர்ட் மற்றும் தொப்பி பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 'புஷ்பா' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் சூட்டோடு சூடாக 'புஷ்பா' படத்தின் 2-ம் பாகத்தையும் வெளியிட, அந்தப் படக்குழுவினர் முடிவு செய்தனர். இதனால் அந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் மிகவும் பரபரப்பாகி விட்டார். இந்தப் படம் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு (2024) ஏப்ரலுக்குள் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 'ஐகான்' படத்தில் அல்லுஅர்ஜூனால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தன்னால் ஒரு படம் தாமதமாவதை விரும்பாததாலோ, அல்லது அதைவிட 'புஷ்பா-2' முக்கியம் என்று கருதியதாலோ, 'ஐகான்' படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து விட்டார். இதையடுத்து அல்லு அர்ஜூனுக்காக காத்துக் கொண்டிருந்த 'ஐகான்' படக்குழுவினர், தற்போது அந்தப் படத்தில் நானியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நானி நடித்த 'மிடில் கிளாஸ் அப்பாயி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதால், இப்போது 'ஐகான்' படத்திற்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ள இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரிக்கிறார். விரைவிலேயே 'ஐகான்' படப்பிடிப்பை தொடங்கி, 'புஷ்பா-2' திரைப்படம் வெளியாவதற்குள் திரைக்குக் கொண்டுவர வேண் டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
'ஐகான்' படம் 'அய்யய்யோ மிஸ் பண்ணி விட்டோமே' என்று அல்லு அர்ஜூனனை ஆதங்கப்பட வைக்குமா? அல்லது 'நல்ல வேளை தப்பித்தோம்' என்று ஆறுதல் கொள்ள வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.