'25 ஆண்டுகள் கழித்து அதற்கான நேரம் வந்துள்ளது' - விஷால் வீடியோ பதிவு
|ஒரு இயக்குநராக உங்கள் முன்னால் பேசுவது சந்தோஷமாக இருக்கிறது என்று விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். துப்பறியும் கதைக்களத்தில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தை விஷாலை வைத்து மிஷ்கின் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
2019ம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தபோது, மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக விஷால் அறிவித்தார். ஆனால், அதன்பின் வேறு படங்களில் விஷால் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "உண்மையில் வார்த்தைகள் வரவில்லை. 25 வருட கனவு இன்று நனவாகிறது. 25 வருடத்திற்கு முன், நான் இயக்குநராக வேண்டும் என்று அப்பாவிடம் சொன்னேன். அதற்காக என்னை நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார்.
அவர் அப்பாவிடம், இவனை நடிக்க அனுப்புங்க, எப்ப வேண்டுமானாலும் இயக்குநர் ஆகலாம் என்றார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து, தற்போது உங்கள் ஆதரவால் ஒரு நடிகனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். உங்களுக்கு முதலில் எனது நன்றிகள்.
எத்தனையோ முறை இயக்குநர் ஆகும் ஆசை வரும் நேரத்தில், நடிகனாக பயணம் தொடரும்போது அதனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இருந்துவிட்டேன். 25 ஆண்டுகள் கழித்து, தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. துப்பறிவாளன் 2-ம் பாகத்திற்காக லொகேஷன் பார்க்க லண்டன் செல்கிறோம். மே மாதம் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். லண்டனில் இருந்து அஜர்பைஜான், அங்கிருந்து மால்ட்டா செல்கிறோம். ஒரு இயக்குநராக உங்கள் முன்னால் பேசுவது சந்தோஷமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கிறது.
இந்த தருணத்தில் எனது அப்பாவுக்கும், அர்ஜுன் சாருக்கும் நன்றி. உங்கள் பெயரைக் காப்பாற்றுகிற மாதிரி துப்பறிவாளன் 2 படத்தை நல்லபடியாக கொண்டு வருவேன் என்று நம்புகிறேன்.
முக்கியமாக மிஷ்கின் சாருக்கு நன்றி, உங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். நான் எந்த குழந்தையையும் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் கைவிட்டதில்லை. உங்கள் குழந்தையை தத்தெடுத்து அதனை கரைசேர்க்க எல்லா வகையிலும் கடுமையாக வேலை செய்வேன், நன்றி" என்று தெரிவித்துள்ளார்.