14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் வடிவேலு
|சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியுடன் வடிவேலு 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கி பிரபலமான ஜினி நடிக்க இருக்கிறார். இது ரஜினிக்கு 170-வது படம். இந்த படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இதில் அரவிந்த சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 1991-ல் வெளியான தளபதி படத்தில் ரஜினியின் தம்பியாக அரவிந்தசாமி நடித்து இருந்தார். 30 வருடங்களுக்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபி சக்கரவர்த்தியின் டான் காமெடி படமாக இருந்ததால் ரஜினி படத்திலும் நகைச்சுவை தூக்கலாக இருக்கும் என்றும் அதற்காக வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி, குசேலன் படங்களில் ரஜினி- வடிவேலு கூட்டணியின் நகைச்சுவை பேசப்பட்டது. 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி படத்தில் வடிவேலு இணைய இருப்பதாக கூறப்படுகிறது.