சிகிச்சைக்குப் பணம் கேட்டு விளம்பரம் - சிங்கம்புலி விளக்கம்
|பேஸ்புக் பணமோசடியால் நடிகரும், இயக்குனருமான சிங்கம்புலி திடீரென்று தனது செல்போன் எண்ணை கூறி பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரும் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளார்.
தமிழில் தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் சிங்கம் புலி. இதற்கு முன்பாக உதவி இயக்குநராகவும், வசனகர்தாவாகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் அஜித்தின் ரெட், சூர்யாவின் மாயாவி என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சிங்கம் புலி உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்துவருவதாகவும், எனவே அவருக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது கோலிவுட்டில் சற்று பரபரப்பை கிளப்ப தற்போது சிங்கம்புலி இது குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த ரெண்டு நாளாக ஒரு போலியான பேஸ்புக் அக்கவுண்ட்லயிருந்து, என் பெயரை பயன்படுத்தி சிலர் ஏமாற்றி பணம் வசூலிக்கின்றனர். அந்த விளம்பரத்தை யாரும் நம்ப வேண்டாம். எனக்கு சிங்கம்புலி ஆக்டர் என்ற ஒரே அக்கவுண்ட்தான் இருக்கு. நான் யார்கிட்டையும் பணம் கேட்கவில்லை. கேட்கக்கூடிய நிலையிலும் இல்லை. என்னைப் பற்றி எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, என்னுடைய நம்பருக்கு போன் பண்ணி முழு விவரங்களையும் கேட்டுவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுங்க" என்றார்.