காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும்... பார்ட்னரிடமும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன் - நடிகை அதிதி ராவ்
|எனக்கு காதல் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. என் பார்ட்னரிடமும் நான் அதைத் தான் எதிர்பார்க்கிறேன் என்று நடிகை அதிதி ராவ் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதையும் சித்தார்த் பெற்றார்.நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'ஹீரமண்டி' என்ற வெப் தொடரில் நடித்து வரும் நடிகை அதிதி ராவ். மும்பையில் நடந்த இத்தொடரின் சிறப்பு விருந்தினர் ப்ரீமியர் நிகழ்ச்சியில் தனது காதல் குறித்தும் பேசியிருக்கிறார்.
"எனக்கு காதல் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. நான் மிகவும் எளிமையானவள். காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த உணர்வு எல்லோருக்குமே வானவில் போன்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். சின்ன வயதில் இருந்தே எனக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். அதனால், எப்போதும் நம்பிக்கையாகவும், உண்மையாகவும் இருப்பேன். இதே விஷயத்தைத்தான் என் பார்ட்னரிடமும் எதிர்பார்ப்பேன்" என்றார்.
இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் கடந்த மாதம் மார்ச் 27-ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், "எங்களுடைய நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிரைவேட்டாக நடந்தது. திருமண தேதியை பெரியவர்கள் முடிவு செய்வார்கள்" என்று சித்தார்த் விருது விழா ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில், முதல் முறையாக நடிகை அதிதி ராவ் தனது திருமணம் குறித்தும், காதல் குறித்தும் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.