தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ்...! புது போஸ்டரால் சர்ச்சை..படக்குழு மீது புகார்...!
|தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மும்பை
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து கொதித்து போனார்கள்
ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர்
இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநவமி அன்று படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில், ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள புதிய போஸ்டர் படக்குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை சகினாக்கா போலீஸ் நிலையத்தில் மும்பை ஐகோர்ட்டு வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா மூலம் சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார்.
அதாவது பகவான் ஸ்ரீ ராமர் இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான உடையில் இருக்கிறார். இது இந்து மதத்தை புண்படுத்தும் செயலாகும் என்று படக்குழு மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (A), 298, 500, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமான அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.