சமந்தா, பகத் பாசிலை தொடர்ந்து அரிய வியாதியால் அவதிப்படும் நடிகை அடா சர்மா
|அரிய வியாதியால் அவதிப்படுவதாக அடா சர்மா தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்தவர் அடா சர்மா. சர்ச்சையை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தும் பரபரப்புக்கு உள்ளானார்.
இந்த நிலையில் அரிய வியாதியால் அவதிப்படுவதாக அடா சர்மா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனக்கு 'எண்டோ மெட்ரியோசீஸ்' என்ற அரிய வகை வியாதி ஏற்பட்டு உள்ளது.
இதனால் எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். 'கேரளா ஸ்டோரி' படத்தில் ஒல்லியாக இருந்தேன். அதன்பிறகு இன்னொரு படத்துக்காக உடல் எடையை கூட்ட தினமும் அதிகம் சாப்பிட்டேன்.
ஒரு நாளைக்கு ஒரு டஜன் வாழைப்பழங்கள் சாப்பிட்டேன். தூங்குவதற்கு முன்பு லட்டு சாப்பிட்டேன். இதனால் எனது உடல் தோற்றம் மாறியது. அதோடு அரிய வியாதியும் வந்தது. இதன் காரணமாக இடுப்பு வலி ஏற்பட்டு நரக வேதனையை அனுபவித்தேன்'' என்றார்.
ஏற்கனவே நடிகை சமந்தா, நடிகர் பகத் பாசில் ஆகியோர் அரிய வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்த நிலையில், நடிகை அடா சர்மாவும் அதுமாதிரியான நோயில் சிக்கி இருப்பதாக பகிர்ந்துள்ள தகவல் பரபரப்பாகி உள்ளது.