கேரளாவில் ஆளுங்கட்சியை தாக்கி திரைப்பட போஸ்டர் வெளியானதால் வெடித்த சர்ச்சை..!
|கேரளாவில் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபன், காயத்ரி நடிப்பில் ஆன்டிராய்டு குஞ்சப்பன் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நா தான் கேஸ் கொடு' என்ற மலையாள படம் நேற்று (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், படம் வெளியாகும் முன்பே சர்ச்சைகளை சந்தித்தது. சர்ச்சைக்கு படத்தின் ஒரு போஸ்டரே காரணம்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில், "தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளங்கள் இருக்கலாம். ஆனாலும் படத்துக்கு வரவேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அரசியல் சர்ச்சையாக மாறியது.
மேலும், இந்த படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான குஞ்சாக்கோ போபன் தன் சமூக வலைதளத்தில் இதனை பதிவிட்டிருந்தார்.
சாலையில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் சம்பவம் ஒரு திருடனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை பின்னணியாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதால், இத்தகைய வாசகம் இடம்பெற்ற போஸ்டருடன் விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வகையில் படத்தின் போஸ்டர் விளம்பரப்படுத்தப்பட்டதாக கட்சி தொண்டர்கள் இணையத்தில் படத்துக்கு எதிராக கொந்தளித்தனர். இடதுசாரி கட்சித் தொண்டர்கள் யாரும் படத்துக்குச் செல்லக் கூடாது என்றும் பதிவிட தொடங்கினர்.
எதிர்க்கட்சிகள் படத்துக்கு ஆதரவாக பேசினர். கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன் " சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்த படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான குஞ்சாக்கோ போபன் பேசுகையில், "ஒரு பள்ளம் எப்படி ஒரு தொழிலாளியின் வாழ்க்கையை பாதித்தது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது ஒரு அரசையோ மனதில் வைத்து இந்தப் படம் எடுக்கப்படவில்லை.
கேரள அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.