கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் - ரகுல் பிரீத் சிங்
|தமிழில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத்சிங் தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே. படத்திலும் நடித்தார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களும் கைவசம் உள்ளன.
நடிகர் நடிகைகள் சம்பள முரண்பாடு குறித்து ரகுல் பிரீத்சிங் கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கதாநாயகர்களோடு ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள். நடிகர் நடிகைகளின் திறமையை வைத்தே சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். நடிகர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கொடுக்கும் நிலைமை மாற வேண்டும்.
ஒரு படத்தில் நடிகர் நடிகை இருவருமே ஒரே மாதிரி உழைக்கிறார்கள். ஆனால் சம்பள விஷயத்தில் மட்டும் வித்தியாசம் காட்டுகின்றனர். ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் திறமை நடிகைகளுக்கும் உள்ளது. ஒரு படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை இருவருக்குமே ஒரே மாதிரி சம்பளம் வழங்க வேண்டும். ஆண், பெண் வித்தியாசம் பார்த்து சம்பளம் கொடுக்க கூடாது. சினிமாவில் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தால் அதுதான் பலம். அதில் யார் நடித்தார்கள் என்பது முக்கியம் அல்ல'' என்றார்.