கதாபாத்திரங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் - நடிகை சம்யுக்தா வேண்டுகோள்
|நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் வர வேண்டும் என நடிகை சம்யுக்தா கூறியுள்ளார்.
சென்னை,
நடிகை சம்யுக்தா மேனன் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் தற்போது தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் விரூபாக்ஷா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம்தேஜ் , சம்யுக்தா, தனஞ்செயன், சக்திவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தமிழில் வெளியிடுகிறார். மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் விழாவில் பேசிய நடிகை சம்யுக்தா,
" ஒரு விஷயத்தில் முதலில் நான் ஓகே சொல்லிக்கொண்டு பின்னர் நான் யோசிப்பேன். விரூபாக்ஷா போன்ற கமர்ஷியல் படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டத்தக்கது. இப்படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத மாதிரி முன்னோக்கி செல்ல வேண்டும்.
அனைத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். பெண் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். திறமையான நடிகைகள் இங்கு இருக்கின்றனர்"எனத் தெரிவித்தார்.