நடிகைகள் படங்களை ஆபாசமாக்கி 'மீம்ஸ்' - ரித்திகா சிங் வேதனை
|வலைத்தளங்களில் ஹீரோயின்களின் படங்களை கட் செய்தும், எடிட் செய்தும், ஆபாசமாகவும் மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள் என நடிகை ரித்திகா சிங் வேதனை உடன் தெரிவித்துள்ளார்.
தமிழில் 'இறுதிசுற்று' படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்திகா சிங். ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது 'இன் கார்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. விஷ்ணுவர்தன் டைரக்டு செய்துள்ளார்.
இந்த படம் குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பேசும்போது, 'இன் கார்' படம் எனக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. கடத்தலுக்கு உள்ளாகும் பெண் மனச்சிதைவுக்கு உள்ளாவதையும், துன்பத்தின் எந்த எல்லை வரை அவள் செல்கிறாள் என்பதையும் நுணுக்கமாக இந்த படம் பேசும். இந்த படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை'' என்றார்.
ஐதராபாத்தில் இந்த படம் சம்பந்தமாக நடந்த நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பேசும்போது, 'சமீப காலத்தில் வலைத்தளங்களில் ஹீரோயின்களின் படங்களை கட் செய்தும், எடிட் செய்தும், ஆபாசமாகவும் மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள். நான் கூட இது போன்றவற்றை எதிர்கொண்டேன். இது வேதனையாக இருக்கிறது. உங்களைப் போலவே எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே இதுபோன்ற கேவலமான மீம்ஸ் டுரோல் செய்யும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்'' என்றார்.