நடிகை தற்கொலை விவகாரம்: தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், 1 டேப் மீட்பு
|தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 'வாய்தா' பட நடிகை பவுலின் ஜெசிகா (வயது 29) கடந்த 2 தினங்களுக்கு முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
"நான் ஒருவரை காதலித்து வந்தேன். அந்த காதல் கைகூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என உருக்கமான கடிதமும் நடிகை பவுலின் தீபா எழுதி வைத்து இருந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது. நடிகை தீபா தற்கொலை செய்து கொண்டபோது கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோனை போலீசார் மீட்டனர். மொத்தமாக நடிகை பவுலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
தடையங்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடையவியல் ஆய்வுக்கு போலீசார் உட்படுத்தியுள்ளனர்.