< Back
சினிமா செய்திகள்
நடிகை சோனாலி போகத் மறைவு; இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு
சினிமா செய்திகள்

நடிகை சோனாலி போகத் மறைவு; இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு

தினத்தந்தி
|
23 Aug 2022 11:29 PM IST

நடிகை சோனாலி போகத் மறைவை இயற்கைக்கு மாறான மரண வழக்காக கோவா போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



புதுடெல்லி,



பா.ஜ.க.வின் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர் மற்றும் பா.ஜ.க. தேசிய செயல் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர் சோனாலி போகத் (வயது 42). அரியானா, புதுடெல்லி மற்றும் சண்டிகர் பா.ஜ.க.வின் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2019-ம் ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வியடைந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் பிரபல தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். தவிர, வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர்.

சோனாலியின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சோனாலி போகத் மரணத்தில் சதி திட்டம் உள்ளது. உணவு சாப்பிட்ட பின்னர், அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என அவர் கூறினார். அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என சோனாலியின் சகோதரி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

கோவாவுக்கு சிலருடன் நேற்று சென்ற சோனாலி, இரவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு அடுத்த நாள் திரும்பியுள்ளார். ஒரு சில மணிநேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனால், அவரது மரணத்தில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என சோனாலியின் சகோதரி குற்றச்சாட்டு கூறியுள்ளார். எனினும், சோனாலியின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.

இதுபற்றி கோவா டி.ஜி.பி. ஜஸ்பால் சிங் கூறும்போது, இதுவரை எங்களுக்கு சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் தென்படவில்லை. ஆனால், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே என்ன விவரம் என்பது தெரிய வரும் என கூறியுள்ளார்.

சோனாலியின் உடல் பாம்போலிம் நகரில் உள்ள கோவா மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தினர் வந்த பின்னர், உடல் நாளைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட கூடும் என கூறப்படுகிறது.

சோனாலியின் கணவர் சஞ்சய் போகத் கடந்த 2016-ம் ஆண்டு பண்ணை வீட்டில் இருந்தபோது, மர்ம மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில், சோனாலியின் மரணத்திலும் சந்தேகம் உள்ளது என அவரது சகோதரி குற்றச்சாட்டு கிளப்பியுள்ளார்.

சோனாலி தனது மறைவுக்கு சில மணிநேரத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு உள்ளார். 2020-ம் ஆண்டில் ஹிசார் நகரில் சுல்தான் சிங் என்ற அதிகாரி ஒருவரை காலணிகளை கொண்டு அடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளிவந்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அவரது மறைவு பற்றிய பல்வேறு தொடர்புடைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவா மருத்துவ கல்லூரியில் உள்ள தடய அறிவியல் மருந்து துறைக்கு அஞ்சுனா காவல் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், சோனாலியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமிக்கும்படி அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர். நடிகை சோனாலி போகத் மறைவு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்