நடிகை சோனாலி போகத்தின் உடலில் பல காயங்கள்; பிரேத பரிசோதனை தகவல்
|நடிகை சோனாலி போகத்தின் உடலில் பல காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
பனாஜி,
பா.ஜ.க.வில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர் நடிகை சோனாலி போகத் (வயது 42). 2019-ம் ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வியடைந்துள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் பிரபல தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். தவிர, வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார். 2020-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்டு 22-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர்.
சோனாலியின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. எனினும், சோனாலி போகத் மரணத்தில் சதி திட்டம் உள்ளது. உணவு சாப்பிட்ட பின்னர், அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என அவர் கூறினார். அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என சோனாலியின் சகோதரி குற்றச்சாட்டு எழுப்பினார்.
எனினும், சோனாலியின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் இல்லை என போலீசார் மறுத்தனர். இதுபற்றி கோவா டி.ஜி.பி. ஜஸ்பால் சிங் கூறும்போது, இதுவரை எங்களுக்கு சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் தென்படவில்லை. ஆனால், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே என்ன விவரம் என்பது தெரிய வரும் என கூறினார்.
சோனாலியின் உடல் பாம்போலிம் நகரில் உள்ள கோவா மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் வந்த பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட கூடும் என கூறப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு அரியானாவில், பண்ணை வீட்டில் இருந்து சோனாலியின் கணவர் சஞ்சய் போகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. எனினும், சோனாலி சம்பவத்தின்போது மும்பையில் இருந்துள்ளார். இந்நிலையில், சோனாலியின் மரணத்திலும் மர்மம் உள்ளது என அவரது சகோதரி குற்றச்சாட்டு கிளப்பியுள்ளார்.
சோனாலி தனது மறைவுக்கு சில மணிநேரத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு உள்ளார். அவரது மறைவு பற்றிய பல்வேறு தொடர்புடைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
நடிகை சோனாலி போகத் மறைவு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்தது.
இதுபற்றி சோனாலியின் 15 வயது மகள் யசோதரா நேற்று கூறும்போது, எனது தாயாருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியமுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.
சோனாலியின் சகோதரி ரூபேஷ் கூறும்போது, அவர்களுடைய தாயார், சோனாலி மரணம் அடைவதற்கு ஒரு நாள் முன்பு சோனாலியிடம் பேசியுள்ளார். அதில், சாப்பிட்ட பின்னர் அசவுகரியமுடன் உணர்கிறேன் என்று சோனாலி கூறியுள்ளார் என ரூபேஷ் தெரிவித்து உள்ளார்.
அவரது உடல் கோவா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளிவந்து உள்ளன. அதில், நடிகை சோனாலி போகத்தின் உடலில் பல காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவரது மரண வழக்கில் கொலைக்கான பிரிவும் சேர்க்கப்பட்டு உள்ளது. சோனாலியுடன் சம்பவத்தன்று இருந்த சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் வாசி ஆகிய இருவரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளன.