
நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் நடித்துள்ள அனுபவங்களை நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 1990-களிலும், 2000-த் திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். சில படங்களில் வில்லியாகவும் வந்தார்.
மாதவனுடன் நடித்த ராக்கெட்ரி படம் திரைக்கு வந்துள்ளது. ஏற்கனவே பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். இரண்டு படங்களிலுமே சிம்ரன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
இந்த நிலையில் மீண்டும் மாதவனுடன் நடித்துள்ள அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவில், ''மாதவனுடன் பார்த்தாலே பரவசம் படத்தில் சிமி கதாபாத்திரத்திலும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இந்திரா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். தற்போது ராக்கெட்ரி படத்திலும் நடித்து இருக்கிறேன். கொஞ்சமும் மாறாமல் இருக்கிறார். நீங்கள் சிறந்தவர். 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவன் இயக்கத்தில் உருவான படத்தில் அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.