கூண்டில் பறவைகள் அடைப்பு நட்சத்திர ஓட்டல் மீது நடிகை ஸ்ரேயா புகார்
|தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுள்ளார். திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் அலிபாக் நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற ஸ்ரேயா அங்கு ஒரு பெரிய கூண்டுக்குள் ஏராளமான பறவைகளை அடைத்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். அதை வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு, ''நீங்கள் பறவைகள் ஆர்வலராக இருந்தால் அவற்றை இப்படி சிறைப்பிடித்து வைக்கக்கூடாது. பறவைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கூண்டில் இத்தனை பறவைகளா? இப்படி பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பது சட்டப்பூர்வமானதா?'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்ரேயா கூறும்போது, "நட்சத்திர ஓட்டலிலோ, வீடுகளிலோ பிராணிகளை கூண்டில் அடைத்து பொறுப்பற்ற முறையில் வளர்க்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டால் அவற்றை மூச்சுத்திணறும் கூண்டில் அடைக்காமல் அவற்றுக்கு தனி இடத்தை ஏற்பாடு செய்யவேண்டும்'' என்றார்.