< Back
சினிமா செய்திகள்
டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா
சினிமா செய்திகள்

டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா

தினத்தந்தி
|
21 Jan 2024 6:35 AM IST

ராஷ்மிகா மந்தனா முகத்தை பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'டீப் பேக்' எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து ராஷ்மிகா மந்தனாவும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து 'டீப் பேக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பிரபலங்களின் போலி வீடியோக்கள் வெளியாகி வந்தன. இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, ராஷ்மிகா மந்தனா முகத்தை பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஈமானி நவீன்(24) என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், இன்ஸ்டாகிராமில் அதிமான பாலோயர்களை பெறுவதற்காக நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோவை வெளியிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், போலி வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்த டெல்லி காவல்துறைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கைது நடவடிக்கை மேற்கொண்ட டெல்லி காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை அன்புடனும், ஆதரவுடனும் அரவணைக்கும் சமூகத்திற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக உணர்கிறேன். பெண்கள் மற்றும் சிறுவர்களே, உங்கள் அனுமதியின்றி உங்கள் படம் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது மார்பிங் செய்யப்பட்டாலோ, அது தவறு!

உங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களால் நீங்கள் சூழப்பட்டிருப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நினைவூட்டுவதாக இந்த சம்பவம் இருக்கும் என்று நம்புகிறேன்."

இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்