நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு திருமணம்...? வைரலான அழைப்பிதழ்; ரசிகர்கள் அதிர்ச்சி
|2021-ம் ஆண்டில் இந்த ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை உறுதி செய்தது.
புனே,
தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். என்.ஜி.கே படத்தில் சூர்யாவுடன் நடித்து இருந்தார். என்னமோ ஏதோ, தேவ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த அவர் இந்தியிலும் தடம் பதித்து உள்ளார். நடிகர்கள் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்துள்ளார். துருதுருவென்ற நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு ஜாக்கி பாக்னானி என்ற காதலர் இருக்கிறார்.
ரகுல் பிரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவரும் 2020-ம் ஆண்டு முதல் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர். பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர். 2021-ம் ஆண்டிலேயே இந்த ஜோடி தங்களுக்கு இடையேயான உறவை உறுதி செய்தது. அதன்பின் தங்களுக்கு இடையேயான இனிமையான தருணங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தது. பொதுவெளியிலும் அவர்கள் ஒன்றாக தோன்றினர்.
ராணுவ குடும்ப பின்னணியில் இருந்து வந்த அவர், உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதற்காக, ரகுல் தனியாக 3 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்வது பற்றி நீண்ட நாட்களாக ரகுல் பிரீத் எதுவும் கூறாமல் இருந்த நிலையில், சமூக ஊடகத்தில் திருமண அழைப்பிதழ் பற்றிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதனை கண்ட அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்படி, இந்த ஜோடி வருகிற 21-ந்தேதி திருமணம் செய்து கொள்ள கூடும் என தெரிகிறது. கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
எனினும், இந்த திருமணம் பற்றிய செய்தியை இருவரும் உறுதியாக தெரிவிக்கவில்லை. இதனால், அதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
ரகுல் பிரீத் சிங், இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதேபோன்று, காதலர் ஜாக்கி, அவருடைய தயாரிப்பில் உருவாகும் படே மியான் சோட்டே மியான் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இதில், அக்சய் குமார், சோனாக்சி சின்ஹா, பிருத்விராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களையேற்று நடித்துள்ளனர்.