பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை - நடிகை ராதிகா
|சினிமாவில் பாலியல் தொல்லை தந்த நடிகர்களின் பெயர்களை சொல்ல மாட்டேன். நிறைய பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
சென்னை,
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில், கேரளாவில் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் கேரவனில் கேமரா வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா குற்றம்சாட்டினார்.
கேரவன்களில் ரகசிய கேமராக்கள் வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை சிலர் வீடியோ எடுத்ததாகவும், நடிகையிடம் அத்துமீறியவரின் முகத்தில் தாம் சுடுத்தண்ணீர் ஊற்றியதாகவும் நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்திருந்தார். மேலும், ரகசிய கேமரா வைத்து எடுக்கப்பட்ட நடிகை உடை மாற்றும் வீடியோவை, படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே சிலர் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தை தற்போது வெளிப்படுத்தியவுடன், நடிகர் மோகன்லால் செல்போனில் அழைத்து விசாரித்ததாகவும் ராதிகா குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, கேரவன் குற்றச்சாட்டு தொடர்பாக, நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொலைபேசியில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, நடிகை ராதிகா தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், புகார் எதுவும் அளிக்காததால், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் சிறப்பு புலனாய்வுக்குழு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராதிகா, "கேரவன் விவகாரம் தொடர்பாக கேரள சிறப்பு புலனாய்வுக் குழு என்னை தொடர்புகொண்டது. எனினும், புகார் தராததால் அவர்கள் மேற்கொண்டு விசாரணை செய்யவில்லை. கேரவன் விவகாரம் தொடர்பாக விளக்கம் மட்டுமே அளித்தேன். புகார் அளிக்கவில்லை. எனினும், ஹேமா கமிட்டி குறித்து பெரிய நடிகர்கள் பேசாமல், மவுனம் காப்பது தவறாக தெரியும். ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் குரல் கொடுத்தால் தான் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
1980-களில் இருந்து நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவிலும் பாலியல் சுரண்டல்கள் உள்ளன. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் பாலியல் சுரண்டல்கள் வெகுவாக குறைந்துவிட்டன. எனினும், பாலியல் தொல்லை தந்த நடிகர்களின் பெயர்களை சொல்ல மாட்டேன். சொல்லவும் முடியாது. நிறைய பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அதனை பற்றி நான் பேச விரும்பவில்லை,
என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் தனியாக தான் எதிர்கொண்டுள்ளேன். கோலிவுட்டில் ஹேமா கமிட்டி போன்ற குழு அமைக்கப்படும் என விஷால் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விஷாலுக்கு அறிவுரை அளிக்க நான் தயார். பாலியல் தொல்லை பற்றி என்னிடம் நிறைய நடிகைகள் தெரிவித்துள்ளனர்." என்று தெரிவித்தார்.