அயோத்தி ராமர் கோவிலில் கணவருடன் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம்
|நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் மகளுடன் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
லக்னோ,
2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகள் மால்டி மேரி ஆகியோருடன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு தனது குடும்பத்தினருடன் பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் இருந்தார். தற்போது மும்பையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது கணவருடன் இந்தியா வந்துள்ள பிரியங்கா சோப்ரா, இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.