பெண்களின் மாதவிடாய் காலம் குறித்து நடிகை நயன்தாராவின் பதிவு
|ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்சினையில்லாத சௌகரியமான மாதவிடாய் காலம் அமைய, பெண்கள் தங்களுக்கு வசதியான சானிடரி நாப்கினை அணிய வேண்டுமென நடிகை நயன்தாரா கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை,
இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.இக்குழந்தைகளின் புகைப்படங்களையும், காணொளிகளை அடிக்கடி இருவரும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவது வழக்கம்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் சில தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், " ஒரு பெண் ஒரு மாதத்தில் பலவிதமான நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்கனவே பலவிதமான ஹார்மோன்மாற்றங்களை சந்தித்துவரும் நாம் நேசிக்கப்படுவதற்கும் ஆறுதல் படுத்தப்படுவதற்கும் ஏங்குகிறோம். நான் எனது பெமி9 சானிடரி நாப்கின் உபயோகித்து வசதி கண்டுள்ளேன்.
அதேபோல் நீங்களும் உங்களுக்கு வசதியான சௌகரியத்தை ஏற்படுத்தும் சானிடரி நாப்கின் ஒன்றினை தேர்வு செய்யுங்கள். இதை நான் இந்தத் தயாரிப்புடன் சம்மந்தம் இருப்பதால் சொல்வதாக நினைக்க வேண்டாம். இது எனக்கு மிகவும் நன்றாக வேலை செய்ததால் சொல்லுகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்னையில்லாத சௌகரியமான மாதவிடாய் காலம் அமைய வாழ்த்துகிறேன். மாதத்தின் மற்ற நேரத்தைப்போல இந்த நேரமும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.