கலகலப்பாக நடந்த வளைகாப்பில் ஆராரோ... ஆரிரரோ... பாட்டு பாடிய நமீதா
|நமீதா வளைகாப்பின்போது தனது புதிய உறவுக்காக ஒரு தாலாட்டு பாடலைப் பாடினார்.
ரசிகர்களை 'மச்சான்' என்று அன்போடு அழைக்கும் நமீதா, சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நமீதா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நிறைமாதமாக இருக்கும் நமீதாவுக்கு, கோலாகலமாக வளைகாப்பு நடந்தது. இதில் ஆரவ், பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டு நமீதாவை வாழ்த்தினர். தாய்மையின் பூரிப்பில் கொள்ளை அழகுடன் இருந்த நமீதா, வளைகாப்பின்போது தனது புதிய உறவுக்காக ஒரு தாலாட்டு பாடலைப் பாடினார். 'சிறுத்தை' படத்தில் வரும் 'ஆராரோ... ஆரிரரோ...' என்ற பாடலை நமீதா தனக்கே உரிய கொஞ்சும் தமிழில் பாடியது பலருக்கும் வியப்பாக இருந்தது.
இதைப் பார்த்த ரசிகர்கள், 'உங்களுக்கு இவ்வளவு அழகாக பாடத் தெரியுமா?.' என்று அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் தாயாகப் போகும் அவருக்கு, பிரசவம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்றும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.