23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் குஷ்பு
|கடந்த 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சாரா கண்ணா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பூ, அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் வாரிசு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் தனது குடும்பத்துக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரராக ஷ்யாமும் நடிப்பதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இது விஜய்க்கு 66-வது படம்.
இந்த படத்தில் குஷ்புவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 1999-ல் வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். குஷ்பு தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து இருந்தார்.