தனி அறையில் முடங்கி கிடக்கும் நடிகை கனகா... கங்கை அமரன் வருத்தம்
|கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா ஜோடியாக நடித்து பெரிய வெற்றியை பெற்ற கரகாட்டக்காரன் படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிலையில் கனகா பற்றி பரபரப்பான தகவல்களை கங்கை அமரன் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து கங்கை அமரன் அளித்துள்ள பேட்டியில், "கரகாட்டக்காரன் படத்தில் கனகாவை அறிமுகப்படுத்தினேன். ரொம்ப நல்ல பொண்ணு. தற்போது கனகா தனி அறையில் வாழ்ந்து வருவதை கேள்விப்பட்டேன். தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை. அதன் பிறகு 'உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா...', என்று பாடல் வரிகளை பாடி, 'நான்தான் கங்கை அமரன் பேசுகிறேன், தயவு செய்து போன் பண்ணுமா...' என்று குரல் பதிவு அனுப்பினேன்.
அப்போதும் கூட கனகா போன் பண்ணவில்லை. தனிமையிலேயே இருக்க வேண்டும் என கனகா முடிவு செய்துவிட்டார். அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த தோல்வி காரணமாக, விரக்தி அடைந்து எனக்கு யாரும் தேவையில்லை என்ற முடிவுக்கு கனகா வந்துவிட்டார். எனக்கு அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இது மாதிரியான சூழலில்தான் அவருக்கு ஆதரவு தேவை. கனகா எனக்கு போன் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவரை நேரில் பார்க்கச் சென்றும் சந்திக்க முடியவில்லை. மெயின் கேட்டை பூட்டி விட்டார். வீட்டுக்கு முன்பாக உள்ள கேட்டையும் பூட்டி இருக்கிறார். வீட்டின் கடைசியில் உள்ள ஒரு அறையில் மட்டுமே இருந்து வருகிறார். அவரது வீட்டுக்கு யாரும் வரமாட்டார்கள். பால்காரர் மட்டும் வந்து பால் பாக்கெட்டுகளை போட்டு விட்டு செல்கிறார். அதை எடுக்க மட்டும்தான் கனகா வாசல் வரை வருகிறார்.
அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்? என்று தெரியவில்லை. கனகா மனதை எப்படியாவது மாற்றி நன்றாக சாப்பிட வைத்து, எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.