விபத்தில் சிக்கிய நடிகை: தொடர்ந்து கவலைக்கிடம்
|அருந்ததி நாயருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்த அருந்ததி நாயர், தமிழில் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' மற்றும் 'பொங்கியெழு மனோகரா', 'பிஸ்தா', 'கன்னிராசி', 'ஆயிரம் பொற்காசுகள்' ஆகிய படங்களிலும், மலையாள படங்கள், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார். சாலை ஓரத்தில் ஒரு மணி நேரமாக ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை சிலர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மூன்று வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலை தேறவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார். செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தினமும் ரூ.2 லட்சம் செலவு ஆவதாகவும், இதுவரை ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.