என் வயதை தவறாக வெளியிடுவதா? கூகுள் நிறுவனத்தை கடிந்து கொண்ட நடிகை
|கூகுள் நிறுவனம் செய்த தவறால் நான் 82 வயது மூதாட்டியாக ஆனதுபோல் உணர்வதாக நடிகை தீபிகா தாஸ் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தீபிகா தாஸ். இவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதையடுத்து தீபிகா தாசுக்கு எத்தனை வயசு என்று ரசிகர்கள் கூகுளில் தேடினர். அப்போது தீபிகா தாசுக்கு வயது 31 என்று வந்தது. இதுபற்றி அறிந்த நடிகை தீபிகா தாஸ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் கூகுள் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்கு வயது தற்போது 28 தான் ஆகிறது. நான் 1993-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி பிறந்தேன் என்று கூகுளில் தவறான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எனது புகழை கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட கூகுள் நிறுவனத்தை கண்டிக்கிறேன். கூகுள் நிறுவனம் செய்த தவறால் நான் 82 வயது மூதாட்டியாக ஆனதுபோல் உணர்கிறேன்.
எனக்கு மனவேதனையாக உள்ளது. நடந்த அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அதனால் நான் எனக்கே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.