< Back
சினிமா செய்திகள்
விவாகரத்து வதந்திக்கு நடிகை பாவனா விளக்கம்
சினிமா செய்திகள்

விவாகரத்து வதந்திக்கு நடிகை பாவனா விளக்கம்

தினத்தந்தி
|
24 Aug 2024 9:23 PM IST

‘நான் விவாகரத்து பெற்று தனிமையில் இருக்கிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது தவறு என்று நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்’ என நடிகை பாவனா பேசியுள்ளார்.

சென்னை

தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.

5 வருட இடைவெளிக்கு பிறகு 2023-ம் ஆண்டு வெளியான 'என்டிக்காக்கக்கொரு பிரேமண்டார்ன்' என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரையுலகத்துக்கு திரும்பினார் நடிகை பாவனா. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹன்ட்' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் இடைவெளி குறித்து பேசியுள்ள நடிகை பாவனா, "நான் மலையாளத்தில் படம் நடிக்கவில்லை என்றாலும், கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். மலையாள படங்களிலிருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் நடிக்க நான் தயாராக இல்லை. மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்ப வேண்டுமா என யோசித்தேன். என்னுடைய நலம் விரும்பிகள் நல்ல வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டாம் என வலியுறுத்தினர். அடுத்து தான் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் 2 மலையாள படங்களில் நடிக்கிறேன். ஒன்று காமெடி. மற்றொன்று திரில்லர்" என்றார்.

மேலும், "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு என்னுடைய தொழிலை வரையறுக்க விரும்பவில்லை. நான் சமூக வலைதளங்களில் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால், நான் ஏன் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதில்லை என கேள்வி எழுப்புகிறார்கள். அதனாலேயே நான் விவாகரத்து பெற்று தனிமையில் இருக்கிறேன் என நினைக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் நினைப்பது தவறு என்று நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அதற்காக நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய கணவரிடம் சென்று வாருங்கள், நாம் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்புபவர்களுக்கு காட்டலாம் என சொல்லிக் கொண்டிருக்க முடியாது" என்றார்.

மேலும் செய்திகள்