நாயை கொன்றவரை தண்டிக்க ஐகோர்ட்டில் மனு கொடுத்த நடிகை
|நாயை கொன்றவரை தண்டிக்க மும்பை ஐகோர்ட்டை நடிகை ஆயிஷா ஜூல்கா நாடியுள்ளார்.
சென்னை,
இந்தியில் 'குர்பான்', 'ஜோ ஜீதா சிக்கந்தர்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆயிஷா ஜூல்கா. விலங்குகள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது வீட்டில் ஆசையோடு ராக்கி என்ற நாயை வளர்த்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அவரது பங்களா வளாகத்தில் மர்மமான முறையில் ராக்கி இறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆயிஷா ஜூல்கா நாயை தனது பங்களாவில் பராமரிப்பாளராக இருந்த ஆண்ட்ரூதான் கொன்றிருப்பார் என்று கருதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், விசாரணையில் நாய் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று ஆண்ட்ரூ தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரேத பரிசோதனையில் நாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்தனர். பின்னர், இரண்டு நாட்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும், உரிய விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, மும்பை ஐகோர்ட்டில் நடிகை ஆயிஷா ஜூல்கா மனு கொடுத்துள்ளார். வாயில்லா ஜீவராசிக்கு துன்பம் விளைவித்தவருக்கு கடும் தண்டனை கிடைக்கவேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.