சாலை விபத்தில் நடிகை அருந்ததி நாயர் படுகாயம்
|அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
விஜய் ஆண்டனியின் சைத்தான், விமல் நடித்த கன்னிராசி, விதார்த் நடித்த ஆயிரம் பொற்காசுகள், சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே உட்பட சில படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். மலையாளப் படங்களிலும் நடித்து வரும் இவர், திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு, கோவளம் பைபாஸ் சாலையில் தனது சகோதரருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். சுமார் ஒரு மணிநேரம் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் சாலையில் சென்றவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது சகோதரி ஆரத்தி நாயர், இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது சகோதரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " தமிழ்நாட்டின் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகளை தெளிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். மூன்று நாட்களுக்கு முன்பு என் சகோதரி அருந்ததி நாயருக்கு விபத்து ஏற்பட்டது உண்மைதான்; பலத்த காயம் அடைந்த அவர், திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார்" என பகிர்ந்துள்ளார்.