நீலி வேடத்தில் பேயாக மிரட்ட வருகிறார் நடிகை அனுஷ்கா
|நடிகை அனுஷ்கா நடிப்பில் தயாராகும் கத்தனார் படம், திகில் காட்சி பிரியர்களை மகிழ்விக்கும் வகையில், 2 பாகங்களாக உருவாக உள்ளது.
சென்னை,
பாகுபலி பட புகழ் நடிகை அனுஷ்கா ஷெட்டி முதன்முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரொஜின் தாமஸ் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர்கள் ஜெயசூரியா மற்றும் வினீத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கத்தனார் - தி வைல்ட் சார்சரர் என பெயரிடப்பட்ட இந்த படம், 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான கடமத்தது கத்தனார் என்பவரின் வாழ்க்கையை பற்றியது. மந்திர தந்திரங்கள் அறிந்த கத்தனாரின் வேடத்தில் ஜெயசூரியா நடிக்கிறார்.
இந்த படத்தில் கள்ளியன்காட்டு நீலி என்ற வேடமேற்று நடிகை அனுஷ்கா நடிக்கிறார். தெய்வீக அழகுடன் கூடிய, ரத்த தாகம் கொண்ட பேயாக அவர் மிரட்ட வருகிறார். திகில் காட்சி பிரியர்களை மகிழ்விக்கும் வகையில், 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம், ஆண்டு இறுதியில் வெளிவர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், கன்னடம் உள்ளிட்டவற்றுடன் ஆங்கிலம், சீன, பிரெஞ்சு, கொரிய, இத்தாலிய, ரஷிய, இந்தோனேசிய மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் வெளியிட படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இதுபற்றி இயக்குநர் ரொஜின் தாமஸ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், எங்களுடைய கத்தனார் திரை பயணத்தில் அனுஷ்கா ஷெட்டி இணைந்து பணியாற்றுவது என்பது கவுரவம் அளிக்கிறது என்று தெரிவித்து சில புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.
அனுஷ்காவும் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, கத்தனார் - தி வைல்ட் சார்சரர் உலகத்தில் நுழைந்துள்ளேன் என பதிவிட்டு உள்ளார்.
நடிகை அனுஷ்கா ஷெட்டி திரை துறைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிறது. கர்நாடகாவின் மங்களூரு நகரில் பிறந்தவரான அனுஷ்கா இதுவரை கன்னட படங்களில் நடித்ததில்லை.
2005-ம் ஆண்டில் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்து அறிமுகம் ஆனார். அதன்பின்பு விக்ரமர்குடு, அருந்ததி மற்றும் வேதம் உள்ளிட்ட அவருடைய படங்கள் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தன.
பாகுபலி படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பின்னர், படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். பாகமதி, நிசப்தம் படங்கள் அந்த வரிசையில் வெளிவந்தன. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றினார். கடந்த ஆண்டில் வெளிவந்த, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நவீன் பொலிஷெட்டியுடன் சேர்ந்து நடித்துள்ளார்.