< Back
சினிமா செய்திகள்
பாரம்பரிய முறைப்படி நடந்த நடிகை அமலா பாலின் வளைகாப்பு
சினிமா செய்திகள்

பாரம்பரிய முறைப்படி நடந்த நடிகை அமலா பாலின் வளைகாப்பு

தினத்தந்தி
|
5 April 2024 3:31 PM IST

கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார்.

இதனிடையே கடந்த ஆண்டு, ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார் அமலாபால். தன்னுடைய பிறந்தநாளன்று காதலனை அறிமுகப்படுத்திய அவர், ஒரே வாரத்தில் அவரை திருமணமும் செய்துகொண்டார். அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடியின் திருமணம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால்.

கர்ப்பமாக இருந்த போதிலும் அவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த ஆடுஜீவிதம் படத்திற்காக பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார் அமலா பால். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் கிடைத்தன. ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் படத்தின் புரமோஷனில் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுக்கும் நடிகைகள் மத்தியில் கர்ப்பமாக இருக்கும்போதே புரமோஷனில் அவர் கலந்துகொண்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் குடும்பத்தினர் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த வளைகாப்பு விழாவில் அமலா பால் தன்னுடைய கணவர் ஜெகத் தேசாய் உடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகள்