'நீலகிரியில் நடிகை ஆலியா பட்டின் சகோதரி நிலம் வாங்கியது செல்லாது' - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
|கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் ஜெகதலா கிராமத்தில் கடந்த 1978-ம் ஆண்டு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு அப்போதைய கலெக்டர் ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கிடு செய்து அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என்று நிபந்தனையும் விதித்துள்ளார். ஆனால் அந்த நிலம் அதற்குப் பிறகு பலரிடம் கைமாறி விற்பனையாகியுள்ளது.
இந்நிலையில் தமிழில் 1996-ம் ஆண்டு வெளியான 'கல்லூரி வாசல்' என்ற திரைப்படத்தில் நடித்தவரும், நடிகை ஆலியா பட்டின் சகோதரியுமான பூஜா பட், நீலகிரியில் உள்ள மேற்கண்ட நிலத்தை வாங்கியுள்ளார். அந்த நிலத்தை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், நிலத்தை அரசுக்கு திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகை பூஜா பட் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நீலகிரியில் நடிகை பூஜா பட் நிலம் வாங்கியது செல்லாது என்று உத்தரவிட்டுள்ளார்.