< Back
சினிமா செய்திகள்
நடிகை ஆகான்க்சா தற்கொலை செய்திருக்க முடியாது:  சக நடிகை பிரியான்ஷூ சிங் பேட்டி
சினிமா செய்திகள்

நடிகை ஆகான்க்சா தற்கொலை செய்திருக்க முடியாது: சக நடிகை பிரியான்ஷூ சிங் பேட்டி

தினத்தந்தி
|
10 April 2023 7:26 PM IST

பிரபல போஜ்புரி நடிகை ஆகான்க்சா தற்கொலை செய்திருக்க முடியாது என அவருடன் நடித்த பிரியான்ஷூ சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வாரணாசி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த மார்ச் 26-ந்தேதிகண்டெடுக்கப்பட்டார்.

சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இந்நிலையில், தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.

நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி, காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது காதலை அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு ஒன்றுக்காக ஓட்டலுக்கு வந்த அவர் மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என கூறப்படுகிறது.

இதுபற்றி அவருடன் நடித்த சக நடிகையான பிரியான்ஷூ சிங் அளித்த பேட்டியில், ஆகான்க்சாவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லை. ஆனால் நாங்கள் ஒன்றாக ஒரு படத்தில் நடித்திருக்கிறோம்.

அதில் நாங்கள் சகோதரிகளாக வருவோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என எனக்கு தெரியாது. ஆனால், அவரை பற்றி நான் அறிந்தவரை, அவர் தற்கொலை செய்திருக்க முடியாது.

அதுபோன்ற நபர் அவர். ஏதோ ஒன்றுக்காக உயிரிழக்க வேண்டும் என அவரது மனம் கூறுமென்றால், முதலில் அதனை கொன்று விடுவார். இதற்கு பின்னணியில் என்ன உள்ளது என எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

அவரது பெற்றோரை நினைக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது. ஏனெனில், வீட்டை அவர் மட்டுமே பார்த்து வந்துள்ளார். இறப்பதற்கு முன்னர், வீட்டுக்கு யார் பணம் கட்டுவார்கள் என்றும் காருக்கு வாங்கிய கடனை யார் அடைப்பார்கள் என்றும் நினைத்திருக்கலாம்.

அவர் தற்கொலை செய்திருப்பார் என்று என்னால் நினைக்க முடியவில்லை. ஆனால் சட்டம் என்று ஒன்று உள்ளது. என்ன நடக்கிறது என பார்ப்போம் என கூறியுள்ளார்.

இதேபோன்று ஆகான்க்சாவின் மற்றொரு சக நடிகையான காஜல் ராகவானி சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், உன்னால் உன்னை கொல்ல முடியும் என்று ஒருபோதும் நான் நம்பமாட்டேன்.

கடவுள் இருக்கிறார். அவர் நிச்சயம் உனது உயிருக்கான விலையை கொடுக்க செய்வார். இன்றில்லா விட்டாலும் நாளை, அது நடக்கும்.

உயிரை கொடுப்பதிலோ அல்லது யாருடைய உயிரையும் எடுப்பதிலோ, உண்மையான அன்பின் விலை வழங்கப்படுவதில்லை. வாழ்ந்தபோது இல்லாத மகிழ்ச்சியை இப்போது நீ பெற்றிருப்பாய் என நம்புகிறேன். நீ எங்கிருந்தபோதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறும்போது, சமர் சிங்குடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும்.

ஒரு ஆல்பத்திற்கு ரூ.70 ஆயிரம் வீதம் சமர் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், ஆகான்க்சா பணம் கேட்கும்போது, சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார். பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை சமர் துன்புறுத்தி வந்து உள்ளார். சமரின் பல ஆல்பத்தில் ஆகான்க்சா பணியாற்றி உள்ளார் என கூறியுள்ளார்.

ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். வாரணாசி போலீசார், மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசியாபாத்தில் வைத்து, ஆகான்க்சாவின் காதலரான சமர் சிங்கை வாரணாசி போலீசார் கைது செய்தனர். நந்த்கிராம் நகரில் வீட்டு வசதி கழகம் பகுதியில் அவர் பதுங்கி இருந்து உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்