திருமணத்தில் நடனமாடும் நடிகர்கள்... நடிகை கங்கனா ரணாவத் விமர்சனம்
|தமிழில் தாம் தூம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் தனது தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் புகைப்படம் ஒன்றை கங்கனா வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பல கோடிகளுக்கு அதிபதியான பிறகும் கங்கனாவின் தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கிறார். மிகவும் எளிமையானவர் என்று பதிவிட்டனர்.
இதற்கு பதில் அளித்த கங்கனா, "என் சம்பாத்தியத்தினால் என் தாயார் செல்வந்தராகவில்லை. என் குடும்பத்தில் அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் என் அம்மா 25 ஆண்டுகளுக்கும் மேலாக டீச்சராக பணியாற்றியவர். சினிமா மாபியா மீது நான் இந்த அளவிற்கு ரியாக்ட் ஆகும் விதத்திற்கு காரணம் என் அம்மாதான்.
அதனால்தான் சில நடிகர்களைப் போல நான் திருமணங்களில் தரத்தை குறைந்து மலிவாக நடனம் ஆட மாட்டேன்'' என்றார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் இந்தி நடிகர்கள் சல்மான்கான், அக்ஷய்குமார் இணைந்து மேடையில் நடனம் ஆடினார்கள். இது சம்பந்தப்பட்ட வீடியோ வைரல் ஆனது. இதை மனதில் வைத்தே கங்கனா அவர்களை விமர்சித்து இப்படி கூறியிருப்பதாக பலரும் பேசுகிறார்கள்.