நடிகர் விஷாலின் ரசிகர் மாநாடு ரத்து...!
|‘மார்க் ஆண்டனி’ இசை வெளியீட்டு விழாவில் 300 பஸ்களில் ரசிகர்களை அழைத்துவர திட்டமிட்டனர்
விஷால் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட திட்டமிட்டனர். இதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 3-ந்தேதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 300 பஸ்களில் ரசிகர்களை அழைத்துவர திட்டமிட்டனர். ஆனால் இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கிடைக்கவில்லை. 300 பஸ்களை நிறுத்த நேரு விளையாட்டு அரங்கில் இடம் இல்லை என்றும், இத்தனை வாகனங்கள் வந்தால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டை ரத்து செய்து விட்டனர்.
இதுகுறித்து விஷால் மக்கள் நல இயக்க செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேரு உள் விளையாட்டு அரங்கில் 3-ந்தேதி நடைபெற இருந்த 'மார்க் ஆண்டனி' இசை வெளியீட்டு விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300 வாகனங்களில் பல ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. இந்த தடங்கல் சிறிதாக இருக்கலாம். மிக விரைவில் மக்கள் நல இயக்கத்தின் அணி சேர்வோம். அது பெரும் விழாவாக அமையும்'' என்று கூறியுள்ளார்.