நடிகர் விஷால்-லைகா வழக்கு; ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
|நடிகர் விஷால்-லைகா நிறுவனம் இடையிலான வழக்கை முடித்து வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டதாகவும், அதற்கான 12 சதவீத ஜி.எஸ்.டி. தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.
எனவே ஜி.எஸ்.டி. தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என விஷால் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கோரி லைகா நிறுவனம் சார்பிலும் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை தொடர்பாக நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் தரப்பில் சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.