திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 24 மணி நேரம் கெடு விதித்த நடிகர் விஷால்
|தன் மீதான குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பெறாவிட்டால், சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
நடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த போது சங்கத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கம் அவர் மீது குற்றச்சாட்டு வைத்தது. மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி பொதுக்குழுவில் ஏகமனதாக நடிகர் விஷாலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
அறிக்கைக்கு பதிலடியாக, தொடர்ந்து படங்களில் நடிப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்தார்.
தற்பொழுது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளார். தன் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை திரும்ப பெறுமாறு கேட்டுள்ளார். அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறியுள்ளார்.